இன்றைய இளசுகளில் பலபேர் எண்ணெய் பசை சருமத்தால் அவதி பட்டு வருகின்றனர். சருமத்தில் எண்ணெய் பசை இருப்பதால் ஏற்படும் நன்மை என்னவென்றால், சருமத்தில் வறட்சி இருக்காது. ஆனால், அதுவே அதிகமானால், நிறைய பிரச்சனைகளை உண்டாக்கும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையை போக்குவதற்கு பத்து பயனுள்ள ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த ஆலோசனைகளை படித்து, முயற்சி செய்து, கருத்துக்களை பகிருங்களேன்...
வெள்ளரி
தினமும் காலையில் வெள்ளரிக்காயை, முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவினால், எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும அழகு கூடும்.
தயிர்
தயிருடன், எலுமிச்சை சாற்றை கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் இருக்கும் அதிகமான எண்ணெய் பசையானது நீங்கும்.
தக்காளி
நான்கு கனிந்த தக்காளி பழத்தை பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். மேலும் தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.
கற்றாழை
கற்றாழையின் ஜெல்லை சருமத்தில் தடவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அதிகமான எண்ணெய் பசையையும் நீங்கும்.
ஆரஞ்சு
காய்ந்த அரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பொடி செய்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைத்து கழுவ வேண்டும்.
முகத்தை கழுவுங்கள்
அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு மட்டுமல்லாமல், முகமும் பளபளப்பாக இருக்கும்.
பப்பாளி
பப்பாளி பழத்தை கூழ் செய்து, அதனுடன் முல்தானி மெட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை கலந்து நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.
சந்தனப் பொடி
சந்தனப் பொடியை, மூல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டரில் கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி கால் மணி நேரம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, பருக்களும் குறையும்.
ஆவி பிடித்தல்
வாரத்திற்கு ஒரு முறை ஆவிப் பிடித்து, பின் ஒரு ஈரமான துணியைக் கொண்டு, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்தால், சருமத்துளைகள் விரிவடைந்து, எண்ணெய் பசை நீங்கி, கரும்புள்ளிகள் வெளியேறிவிடும்.
எண்ணெய் உணவுகளை தவிருங்கள்
எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பானங்கள், காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடலாம்.
No comments:
Post a Comment