22.2.14

வாழைக்காயின் மருத்துவ குணங்கள்!

அன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம்.

சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொரியல் செய்தும், கூட்டு செய்து சாப்பிடுவதுடன், சாம்பாரிலும் போட்டு சாப்பிடுவர்.

ஆனால், வாழைக்காயில் உள்ள மருத்துவ குணம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ வாழைக்காயின் மருத்துவ குணங்கள்...

வாழைக்காய்களில் பல வகைகள் இருந்த போதிலும், மொந்தன்(கறிவாழை )எனப்படும் நாட்டு வாழைக் காய்களையே சமையலுக்காக பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். மற்ற வகை வாழைக்காய்களையும் சாப்பிடலாம். அவை பரவலாகக் கிடைப்பதில்லை.

வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதுடன், மாவுச்சத்தும் உள்ளது. எனவே வாழைக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமனாகும். நல்ல வளர்ச்சியையும் அளிக்கும்.

வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும். மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது. 

வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.

வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.

என்றாலும் வாழைக்காய் சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment