21.2.14

மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்

``பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; 
தென்னையைப் பெத்தா இளநீரு'' என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.

தென்னை மரத்தின் சிறப்பையும், அதில் இருந்து நாம் பெறக்கூடிய பொருட்களின் பயன்களையும் உணர்த்துவதாக இந்த வரிகள் அமைந்துள்ளது.

தேங்காயானது சமையலுக்கு பல விதங்களில் பயன்படுகிறது. தேங்காய் பருப்பை காயவைத்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகச் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது.

குழந்தைகள் பிறந்து ஓரிரு மாதங்கள் ஆனவுடனேயே கிராமங்களில் தாதியர் அல்லது நம் வீட்டில் உள்ள பாட்டிமார், குழந்தைகளுக்கு காலை நேரத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதைப் பார்த்திருப்போம்.

பொதுவாக குழந்தைகளின் மிருதுவான தோல் பகுதியை தேங்காய் எண்ணெய் மேலும் மென்மையாக்குவதுடன், பூச்சிக்கடி அல்லது கொசுக்கடி போன்றவை இருப்பின் அவற்றின் பாதிப்பில் இருந்து எண்ணெயில் உள்ள கிருமி நாசினி பாதுகாக்கிறது. தவிர, குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் மசாஜ் முக்கியப் பங்காற்றுகிறது.

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் அன்றாடம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசி, சுமார் அரைமணி நேரம் கழித்து சுடுதண்ணீரிலோ அல்லது சாதாரண தண்ணீரிலோ குளித்தால், தேவையற்ற நோய்கள், உடல் களைப்பில் இருந்து மீளலாம்.

வீடுகளில் சமையல் செய்யும் போதோ அல்லது காய்கறி போன்றவற்றை நறுக்கும்போதோ தீக்காயமோ அல்லது வெட்டுக்காயமோ பட நேரிட்டால், காயம் பட்ட இடத்தில் சற்றே தேங்காய் எண்ணெயை தடவினால், கிருமித் தொற்றில் இருந்து பாதுகாக்கலாம். காயத்தின் எரிச்சலும் அடங்கும்.

வெட்டுக் காயங்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புசக்தி மருந்தாக செயலாற்றுகிறது.

உடல் சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவற்றுக்கு ஒரு சிட்டிகை அளவு தேங்காய் எண்ணெயை வாயினுள் விட்டு குடிக்க, அடுத்த நாளே வாய்ப்புண் பறந்தோடி விடுவதுடன் உடல் சூடு தணிகிறது.

தேங்காய் எண்ணெயில் செய்த சிப்ஸ் போன்ற பலகாரங்கள் வயிற்றுக்கு பாதிப்பு எதையும் தருவதில்லை. அன்றாட உணவிலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால், உடலுக்கு உணவினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கிறது.

இயற்கை அளித்துள்ள வளங்களில், முக்கியமான ஒன்று தென்னை மரம் என்றால், தேங்காய் எண்ணெய் உடலுக்கும், அன்றாட சமையலுக்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

No comments:

Post a Comment