21.2.14

ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சி





`ஏண்டா இஞ்சி தின்ன குரங்காட்டம் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று பலரிடம் நாம் கேட்டிருப்போம்.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.

இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

பெரும்பாலான வீடுகளில் வாரத்தில் ஒருநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையோ அல்லது விடுமுறை நாட்களிலோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் காபிக்குப் பதிலாக, இஞ்சி சாறுடன் பால் கலந்த இஞ்சிக் காபியை கட்டாயமாகக் கொடுப்பார்கள்.

இஞ்சியின் காரம் தவிர்க்க சர்க்கரை, பனைவெல்லம், கருப்பட்டி ஏதாவதொன்றை பாலில் சேர்த்து, இஞ்சியை அரைத்து எடுத்த சாறினை சேர்த்து கொதிக்க வைத்து பின் ஆறிய பின் குடிப்பதற்கு கொடுப்பார்கள்.

வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நோய்களுக்கு வித்திடும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. 

பசியைத் தூண்டுவதால், குழந்தைகள் எந்த உணவாக இருந்தாலும் விரும்பிச் சாப்பிடுவதற்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கும் இஞ்சி அருமருந்தாக அமைகிறது.

எனவே வாரம் ஒருமுறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறையோ இஞ்சிக் காபி அருந்துவது அவசியம். மேலும் இஞ்சிசாறு உடலில் சேரும்போது, உடல் பொலிவு பெறுவதுடன் சுறுசுறுப்பும் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

பொதுவாகவே சமையலில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது அன்றாட உடல் ஜீரணத்திற்கு உகந்தது. 

அசைவ உணவு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், அது உடலில் தேவையற்ற சதையை ஏற்படுத்தாமல், முற்றிலுமாக எரிந்து ஜீரணமாவதற்கு இஞ்சி முக்கியப் பங்காற்றுகிறது எனலாம்.

No comments:

Post a Comment